அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மத்திய அரசின் கல்வி நிதியும்!
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி கடந்த 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பலவும் ஏற்கவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கையின் அம்சமான மும்மொழி கொள்கையை ஏற்குமாறு வலியுறுத்தி கிடுக்குப்பிடி போட்டு வருகிறது.
மீண்டும் மொழிப் போர்
குறிப்பாக தமிழகத்தில் ஆளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் கொள்கை ரீதியாக முரண்டு பிடித்து வருகிறது. இது அரசியல் மோதலாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான், பள்ளிக் கல்வித்துறைக்கு எஞ்சிய நிதியை விடுவிப்போம் என்று கறார் காட்டியது. இது இரண்டு அரசுகளுக்கும் இடையில் மொழி போராக மாறியது.