dark_mode
Image
  • Sunday, 14 June 2026

கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு..புதிய விதிமுறைகளால் ஏற்பட போகும் சிக்கல்

கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு..புதிய விதிமுறைகளால் ஏற்பட போகும் சிக்கல்

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள அச்சம் எழுந்துள்ளது.

 

தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்படுவதை தவிர்க்கவே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட அரசின் பல்வேறு வசதிகளை பெற கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே பலர் கட்டிடத்தை முறையாக கட்டி வந்தனர். என்ஜினியரிங் வரைப்படம் முதல் மழைநீர் சேமிப்பு வரை எல்லா விஷயத்திலும் பார்த்து பார்த்து கவனமாக இருந்தனர்.

ஏனெனில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்றால், அரசிடம் சமர்பித்த வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்க மாட்டார்கள். இதன் காரணமாக கட்டிடம் கட்டுபவர்கள் இந்த விதிகளை முறையாக கடைபிடித்து வந்தனர்.

ஆனால் அதேநேரம் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கட்டுமான அமைப்புகள் மற்றும் பொதுக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு புகார்கள் பறந்தன. கட்டிட நிறைவு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்கிறார்கள் என்று சிலரும், சிலர் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவது எளிமையாக இல்லாமல் மிகவும் சவாலாக உள்ளதாகவும் கூறி புகார்கள் தெரிவித்தனர்.பெரிய கட்டிடங்களை விட சிறிய அளவில் வீடு கட்டுவோர் இந்த கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுதவற்கு பல்வேறு வகையில் சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளித்தது.

இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே கட்டிடங்களுக்கு இனி மின் இணைப்பு பெற முடியும் எனற அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது வரவேற்பை பெற்ற போதிலும் எதிர்ப்பும் உள்ளது.

முன்னதாக வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் விதிமீறல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

ஏற்கனவே உள்ள விதியின்படி கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இல்லை. அதேநேரம் அவர்களுக்கு இருந்த ஒரே கடிவாளம் என்றால், கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்தது. இதனால் இந்த விதிக்கு அச்சப்பட்டு தான் விதிமீறல் கட்டிடங்கள் வராமல் இருந்தது. தற்போது விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சிலர்.

கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு..புதிய விதிமுறைகளால் ஏற்பட போகும் சிக்கல்

related_post