கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள்மீது இஸ்ரேல் தாக்குதல்; தோஹாவில் வெடிப்புச் சத்தம்

காஸாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய ஹமாஸ் இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தாக்குதல் நடத்தியது.
மத்திய கிழக்கு முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல், ஹமாஸ் அரசியல் தளம் அமைந்துள்ள கத்தாரையும் தனது இலக்காகக் கொண்டுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டிய கத்தாரின் அல் ஜசிரா தொலைக்காட்சி, இந்தத் தாக்குதல் ஹமாசின் காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தியோர்மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.
தோஹாவில் செவ்வாய்க்கிழமை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் சாட்சிகள் தெரிவித்தனர். நகரின் லெக்டிஃபியா பெட்ரோல் நிலையத்திலிருந்து கரும்புகை கிளம்பியதாக அவர்கள் கூறினர்.
பெட்ரோல் நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள சிறிய குடியிருப்பு வளாகம், காஸா போர் தொடக்கத்திலிருந்து கத்தாரின் எமிரி காவலர்களால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோள்காட்டிய இஸ்ரேலிய ஊடகங்கள், இந்தத் தாக்குதல் ஹமாசின் நாடுகடத்தப்பட்ட காஸா தலைவரும் மூத்த பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல் ஹய்யா உள்ளிட்ட உயர்மட்ட ஹமாஸ் தலைவர்களை இலக்காகக்கொண்டது என்று தெரிவித்தன.
ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமரசம் செய்துவரும் கத்தார், ஹமாஸ் அதிகாரிகள்மீது நடத்தப்பட்டது “கோழைத்தனமான தாக்குதல்” என்று கண்டித்ததுடன், இது அனைத்துலகச் சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும் குறிப்பிட்டது.