சதுரகிரியில் களைகட்டும் ஆடி அமாவாசை: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை விழா கோலாகலமாக தொடங்கவுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று முதல் 25 ஆம் தேதி வரை, லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் சதுரகிரியை நோக்கிப் படையெடுக்க தொடங்கினர். இன்று காலை 5:45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத சூழலில், சாரல் மழை விட்டு விட்டுப் பெய்தது, பக்தர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
இன்று மாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. அபிஷேகம் முடிந்ததும், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மகா தீபாராதனை நடைபெறும்.
நாளை சிவராத்திரி என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜூலை 24 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 25 ஆம் தேதி மதியம் 1:15 மணி வரை அமாவாசை திதி நீடிப்பதால், ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.