ஜப்பான் உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற மறுநாளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அதேநேரத்தில் அவர் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தற்போது, ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும். இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும். ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
இந்தோனேசியப் பொருட்களுக்கு 18% வரியும் விதிக்கப்படும். கூடுதல் வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும். இது போன்ற ஒப்பந்தம் இதற்கு முன் போடப்பட்டது கிடையாது. இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம், குறிப்பாக ஜப்பான் நாட்டுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.