dark_mode
Image
  • Sunday, 20 July 2025

ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி

ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி

நன்னிலம்: ''விவசாயிகள்,மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தி.மு.க., அரசுக்கு, கம்யூ., கட்சிகள் ஜால்ரா போடுகின்றன,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

 

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில், நேற்று, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

தி.மு.க.,வின் நிலை பரிதாபமாக உள்ளது. எங்கள் கட்சியில் சேருங்கள் என ஸ்டாலினும், கட்சியினரும் கெஞ்சுகின்றனர். ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்றபின், தி.மு.க., நலிவடைந்துவிட்டது. அதனால்தான், வீடுதோறும் கதவுகளை தட்டுகின்றனர். ஒரே திட்டத்திற்கு, வேறு வேறு பெயர்களை வைத்து, மக்களை குழப்பி கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு, 12,000 கோடி பயிர் காப்பீடு பெற்று தந்தது அ.தி.மு.க., அரசு. ஆனால், தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.

காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க., அரசு. பருத்திக்கு, நியாயமான விலை கிடைக்க அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது.

அதன்பின், உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, பருத்தி கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டது. பின், உயர் அதிகாரிகளை கொண்டு, பருத்தி ஏலம் விடப்பட்டது. கிலோ 52 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட பருத்தி, 74 ரூபாயாக உயர்ந்தது.

விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தி.மு.க., அரசுக்கு, கம்யூ., கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. கம்யூ., கட்சிகளுக்கு தனித்தன்மை வேண்டும். தி.மு.க.,விற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர். தி.மு.க.,விடம் பணம் வாங்கிக் கொண்டு மவுனம் காக்கின்றனர்.

சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதைப்பொருள், கஞ்சா விற்பனை, பாலியல் கொடுமைகள் அதிகரித்து உள்ளன.

குற்றம் செய்பவர்களுக்கு பயம் இல்லை. குழந்தை முதல், பாட்டிவரை பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க.,வை பார்த்து, தி.மு.க., மிரண்டுபோய் உள்ளது. ஸ்டாலின் மாடல் தோல்வி மாடல். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

related_post