dark_mode
Image
  • Sunday, 20 July 2025

டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு 'சஸ்பெண்ட்' செய்ய உயர் அதிகாரிகள் முடிவு

டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு 'சஸ்பெண்ட்' செய்ய உயர் அதிகாரிகள் முடிவு

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய, டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

 

கடந்த 1996ல் காவல் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர், உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு என, பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு, காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, 63, கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி, 65, அ.தி.மு.க., பிரமுகர் பிரபு, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை போலீசார், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் உள்ள பயன்பாடு இல்லாத காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று, சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இது பற்றி, சுந்தரேசன் விசாரித்து, போலீசார் சித்ரவதை செய்து இருப்பதை உறுதி செய்து, மனித உரிமை கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை, டி.ஜி.பி., மற்றும் அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாருக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்ததால், 2024 அக்டோபரில் சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதே பிரச்னை எழுந்தது. மனித உரிமை கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்த சுந்தரேசன், ஒரு மாதத்திற்கு பின், மயிலாடுதுறைக்கு சென்று பணியில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன், அவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொலிரோ வாகனம், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்படி பறிக்கப்பட்டு உள்ளது.

வாகன பறிப்பு செயலில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசந்தர் அநாகரிகமாக நடந்து கொண்டார். இச்சம்பவத்தின் பின்னணியில், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் உள்ளனர் என்றும், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, காவல் துறையில் அதிகாரிகள் செய்யும் 'டார்ச்சர்' குறித்து, செய்தியாளர்களுக்கு சுந்தரேசன் பேட்டி அளித்ததால், அவருக்கு காவலர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. அவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில், தஞ்சை சரக டி.ஐ.ஜி., ஜியாஉல்ஹக் விசாரணை நடத்தினார்.

related_post