தடை செய்யப்பட்ட 'பி.எஸ்., 4' வாகனம் பதிவு செய்த அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: தமிழகத்தில், 2020ம் ஆண்டுக்கு பின், பி.எஸ்., 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்., 4 வாகனங்கள், 2020 ஏப்ரல் மாதத்திற்கு பின் தடை செய்யப்பட்டன. அதன்பின்னும், பி.எஸ்., 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுபற்றி விசாரிக்க உத்தரவிட கோரியும், சென்னையை சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தமிழகத்தில், பி.எஸ்., 4 ரக வாகனங்கள் உட்பட, 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
'மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்பு துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, ''பி.எஸ்., 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில், பல அதிகாரிகள் தவறு செய்தது தெரியவந்துஉள்ளது. இதுதொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்று, கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த, சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஜூன் 6ம் தேதிக்கு, வழக்கை தள்ளிவைத்தார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description