dark_mode
Image
  • Wednesday, 14 May 2025

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி

புதுடில்லி: ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் தூங்க முடியாது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பெருமை


அப்போது, எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம் முன்பு நின்று பிரதமர் மோடி பேசியதாவது: முப்படைகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறேன். உங்களை பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய விமானப்படையின் வீரத்தை ஒட்டு மொத்த உலகமே பார்த்தது.

பாகிஸ்தான் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். இந்திய பெண்களுக்கான நீதியை நிலைநாட்டி உள்ளீர்கள். ராணுவ வீரர்களை உலகமே பாராட்டுகிறது. ராணுவத்தினர் நிகழ்த்திய 'ஆபரேஷன் சிந்தூர்' உலகம் முழுதும் எதிரொலித்தது.

குடிமகனின் குரல்


'பாரத் மாதா கி ஜே' என்பது நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரின் உறுதிமொழியாகும். நாட்டிற்காக வாழவும், ஏதாவது செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும்.

நமது ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டையை தகர்த்த போதும், நமது ஏவுகணை பயங்கர சத்தத்துடன் இலக்குகளை தாக்கிய போதும், நமது எதிரிகள் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை கேட்டனர். தினமும் சூரியன் உதயமாகும்போதும், இரவு நேரத்திலும் எதிரிகள் ' பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை கேட்டனர். நமது எதிரிகள் அணுகுண்டு மிரட்டல் விடுத்த போது, அவர்களுக்கு பதிலடியாக, விண் அதிர 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷம் கேட்டது. லட்சக்கணக்கான இந்தியர்களை நீங்கள் பெருமைப்பட வைத்து உள்ளனர். ஒவ்வொரு இந்திய தாய்மார்களையும் பெருமையடைய வைத்துள்ளீர்கள். நீங்கள் வரலாறு படைத்து உள்ளீர்கள்.

இடமில்லை


இந்த விமானபடை தளத்தையும், வேறு சில விமானபடை தளங்களையும் பல முறை தாக்க முயன்றனர். அவர்கள் எத்தனை முறை முயன்றாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. நமது வான் பாதுகாப்பு கவசமானது, பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் நம்மை தாக்க முடியவில்லை. இதற்காக விமானப்படை வீரர்களை வாழ்த்துகிறேன். நீங்கள் செய்த சிறப்பான பணியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

பயங்கரவாதிகள் நம்பியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை தோற்கடித்து உள்ளன. பயங்கரவாதிகள் அமர்ந்து நிம்மதியாக சுவாசிக்க பாகிஸ்தானில் எந்த இடமும் இல்லை.

எச்சரிக்கை


பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் 'லட்சுமண ரேகை ' தெள்ளத் தெளிவாக உள்ளது. மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடிகொடுக்கும். இதனை சர்ஜிக்கல் தாக்குதல், விமானப்படை தாக்குதலில் பார்த்தோம்.

நேற்று கூறியதைபோல், இந்தியா மூன்று விஷயங்களை முடிவு செய்துள்ளது.

முதலாவது: இந்தியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், நமது வழியில் பதிலடி இருக்கும்.

இரண்டாவதாக எந்த அணுகுண்டு மிரட்டலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

மூன்றாவதாக பயங்கரவாத ஆதரவு அரசு, மற்றும் பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுபவர்களை பிரித்து பார்க்க மாட்டோம். இந்தியாவின் புதிய கொள்கையை உறுதியை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒத்துழைப்பு


'ஆபரேஷன் சிந்தூர்' என்பது சாதாரண ராணுவ நடவடிக்கை அல்ல. இந்தியாவின் கொள்கை, தீர்க்கமான தன்மை மற்றும் நோக்கம் ஆகியவற்றின் சங்கமம். இந்தியா என்பது புத்தர் மற்றும் குரு கோவிந்த் சிங்கின் நிலம். நமது சகோதரிகள் மற்றம் பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமம் அழிக்கப்பட்டபோது, நாம் பயங்கரவாதிகளின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை அழித்தோம்.

நீங்கள் பயங்கரவாதிகளை அவர்கள் முன்னாள் நின்று தாக்கி அழித்தீர்கள். நீங்கள் பயங்கரவாத முகாம்களையும் அழித்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றீர்கள். 'ஆபரேஷன் சிந்தூரின்' ஒவ்வொரு தருணமும் இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு சான்று. நமது ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்பு உண்மையில் அற்புதமாக இருந்தது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒருங்கிணைப்பு அற்புதமாக இருந்தது. கடலில், கடற்படை தனது ஆதிக்கத்தை காட்டியது. ராணுவம் எல்லையை வலுப்படுத்தியது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் பிற படைகள் அற்புதமான திறன்களை காட்டின. இந்த ஒத்துழைப்பு, இந்திய ஆயுதப்படைகளின் திறனின் வலுவான அடையாளமாக மாறி உள்ளன.

சாதனை


நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தான் தூங்காது. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நீங்கள் நாட்டின் தன்னம்பிக்கையை அதிகரித்து உள்ளீர்கள். நாட்டை ஒற்றுமையின் நூலில் பிணைத்துள்ளீர்கள். எல்லையை பாதுகாத்து உள்ளீர்கள். நாட்டின் பெருமையை புதிய உயரத்திற்கு உயர்த்தி உள்ளீர்கள். இதுவரை இல்லாத மற்றும் கற்படை செய்ய முடியாததை நீங்கள் செய்துள்ளீர்கள்.

நாட்டின் அடையாளம்


மனித வளத்தைத் தவிர, 'ஆபரேஷன் சிந்தூரில்' தளவாடங்களின் ஒருங்கிணைப்பும் அற்புதமாக இருந்தது. பல போர்களை கண்ட இந்தியாவின் பாரம்பரிய வான்பாதுகாப்பு கவசம் ஆகாஷ் என அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இவை அனைத்திற்கும் மேலாக எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் போன்ற நவீன பாதுகாப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வலுவான பாதுகாப்பு இந்தியாவின் அடையாளமாக மாறி உள்ளது.

போட்டி போட முடியாது

வான் மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தள்ளன. இந்த பெருமை அனைத்தும் உங்களையே சாரும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நமது விமானப்படை, பாகிஸ்தானுக்குள் உள்ளே இருந்த பயங்கரவாத முகாம்களையும் தாக்கி அழித்தது. 20 - 25 நிமிடங்களில், எல்லை தாண்டி இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளீர்கள். இது நவீன தொழில்நுட்ப படையில்லாமல் சாத்தியம் இல்லை.

இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தானால் போட்டி போட முடியாது. கடந்த தசாப்தத்தில், உலகின் நவீன தொழில்நுட்பம் நமது விமானப்படை மற்றும் மற்ற படைகளை அடைந்துள்ளது. ஆனால், புதிய தொழில்நுட்பம் மற்றும் சவால்கள் அனைத்தும் பெரியவை. நுட்பத்துடன் நீங்கள் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளீர்கள். இந்த போரில் உங்களது திறமையை நிரூபித்துள்ளீர்கள்.

பெருமை


பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயங்கரவாத தலைமையகத்தை தாக்குவது தான் நமது நோக்கம். ஆனால், பாகிஸ்தான் சதி செய்து, பயணிகள் விமானத்தை கேடயமாக கொண்டு வந்தது. இது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும். பயணிகள் விமானத்தை பாதிக்காமல் நமது இலக்கை எட்டியதற்காக உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கெஞ்சல்

இந்திய விமானப்படை இப்போது எதிரிகளை ஆயுதங்களால் மட்டுமல்ல, தரவுகள் மற்றும் ட்ரோன்களை தடுப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்தே, ராணுவ நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாம் உரிய பதிலடி தருவோம். அந்த பதிலடி நமக்கு நமது ஸ்டைலில் இருக்கும். நாம் விழிப்புடன் தயாராக இருக்க வேண்டும். தற்போது இருப்பது புது இந்தியா என்பதை எதிரிகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியா அமைதியை விரும்பும். ஆனால்,மனிதநேயத்தை தாக்கினால், புதிய இந்தியா, எதிரிகளை எப்படி தரைமட்டமாக்குவது என்பது தெரியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

comment / reply_from

related_post