நள்ளிரவு 1:27 வரை நீடித்த அரிய முழு சந்திர கிரகணம்; வெறும் கண்களால் பார்த்து ரசித்த மக்கள்

சென்னை: நேற்று செப்.,7 ம் தேதி) இரவு 9:57 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1: 27 வரை நீடித்த அரிய முழு சந்திரகிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர்.
சூரியன், நிலா மற்றும் பூமி இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்வது தான் கிரகணங்கள். சூரியனை நிலவின் நிழல் மறைத்தால் அது சூரிய கிரகணமாகும். அதுவே, பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அதற்கு சந்திர கிரகணம் என்று பெயர்.
கடந்த மார்ச்சில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் காணப்பட்டது. அதன் பின்னர், முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நேற்று (செப்.7) இரவு 9.57 மணிக்கு துவங்கியது. நள்ளிரவு 1.27 மணி வரை நீடித்தது. இது மிக நீண்ட சந்திர கிரகணமாகும்.
சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில், காணப்படும் முழு சந்திர கிரகணம் 11.42 மணி முதல் 12.33 மணி வரை நடந்தது. இதற்கு பிளட் மூன்(blood moon) என்று பெயர். உலகின் பல நாடுகளில் தெரியும் இந்த சந்திர கிரகணம், இந்தியாவில் குறிப்பாக, டில்லி, கவுகாத்தி, லக்னோ, பெங்களூரு, திருவனந்தபுரம் சென்னை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெறும் கண்களில் தெளிவாக பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் ஒரு சில நகரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மக்களால் முழு சந்திரகிரகணத்தை பார்க்க முடியவில்லை.
இந்த சந்திர கிரகணத்தை காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனி அடுத்த சந்திர கிரகணம் 2028ம் ஆண்டு டிச.31ல் தான் நிகழும் என்று குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை காண முடியாமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திரகிரகணம் குறித்த நேரடி ஒளிபரப்பு தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.