dark_mode
Image
  • Wednesday, 17 December 2025

அரசு பள்ளி சுவர் இடிந்து ஏழாம் வகுப்பு மாணவன் பலி: திருவள்ளூர் அருகே நடந்த சோகம்; உறவினர்கள் போராட்டம்

அரசு பள்ளி சுவர் இடிந்து ஏழாம் வகுப்பு மாணவன் பலி: திருவள்ளூர் அருகே நடந்த சோகம்; உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசு உயர்நிலை பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த மாணவன், மதிய உணவு சாப்பிடும்போது, சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானான். பராமரிப்பில் அரசு காட்டிய அலட்சியமே உயிர்பலிக்கு காரணம் என, மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சரத்குமார் மகன் மோகித், 11. கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருப்பதால் நேற்று வழக்கம்போல், மோகித் பள்ளிக்கு சென்றான். மதிய தேர்வுக்காக, வகுப்பறையில் சக மாணவர்களுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

உணவு இடைவேளையின்போது, வகுப்பறைக்கு செல்லும் சாய்தள பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் பகுதியில் அமர்ந்து, மோகித் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், சுவர் அடியில் சிக்கி, மோகித் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவலறிந்து வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 'பள்ளி கட்டடம் மற்றும் சுவரை முறையாக பராமரிக்காததால், சுவர் இடிந்து விழுந்து மாணவன் மோகித் பலியாகியுள்ளான். மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த போலீசார், உறவினர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பள்ளி வளாகம் மற்றும் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அமுதா ஆகியோர் கூறியதாவது: ஏற்கனவே இந்த பள்ளியை ஆய்வு செய்தோம். பள்ளி வளாகத்தில் இருந்த பக்கவாட்டு சுவர் சேதம டைந்து இருந்தது. சுவரை இடித்து அகற்றும்படி, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.இதற்கிடையே, இந்த பெருந்துயரம் நடந்துள்ளது. இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்



முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மாணவர் மோகித், பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். மாணவரின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று, சினிமா போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசு பள்ளிகளின் கட்டுமானங்களை பராமரிப்பதற்கு செலவிட்டு இருந்தால், இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல் இருக்கிறார். உதயநிதி பிறந்த நாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா? பாழடைந்த அரசு பள்ளி கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: அரசு பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, மாணவர் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது; கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் பள்ளிக்கல்வி துறையின் பொற்காலமா? கோடி கோடியாய் கொட்டி, 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்று பிரமாண்ட விழாக்களை நடத்தும் தி.மு.க., அரசுக்கு, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லை என்பது எவ்வளவு கேவலம்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவர் இறந்ததை விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. தி.மு.க., அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும். முதல்வரும், அமைச்சருமே இதற்கு முழு பொறுப்பு.

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: அரசு பள்ளியின் சேதமடைந்த சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் அக்கறை காட்டாததால், அப்பாவி மாணவரின் உயிர் பறிபோயுள்ளது. முதல்வர் ஸ்டாலின், மக்களிடமிருந்து எந்த அளவுக்கு விலகி இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

related_post