dark_mode
Image
  • Wednesday, 17 December 2025

 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக்கலவரத்தை துாண்டுகிறது தி.மு.க.,: அண்ணாமலை காட்டம்

 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக்கலவரத்தை துாண்டுகிறது தி.மு.க.,: அண்ணாமலை காட்டம்

புதுச்சேரி: திருப்பரங்குன்றம் பிரச்னையில் தி.மு.க., தேவையின்றி மதக்கலவரத்தை துாண்டுகிறது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

 

புதுச்சேரியில் முருக பக்தர்கள் இயக்கம் சார்பில் நேற்று நடந்த தீபம் ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் முருகனை சீண்டுவதையே கடந்த 2 ஆண்டாக தி.மு.க.,வின் வேலையாக உள்ளது. ராமநாதபுரம் எம்.பி., மலையில் பிரியாணி சாப்பிட்டது, மலை பெயரை சிக்கந்தர் என மாற்ற முயற்சிப்பது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், இவர்களாகவே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

புதுச்சேரி காங்., எம்.பி., வைத்திலிங்கம் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதுவும் தேர்தலில் எதிரொலிக்கும்.

இவ்வழக்கில் நீதிமன்றம் டிச.1ம் தேதி தீர்ப்பு வழங்கிய பின் மூன்று நாட்களுக்கு பிறகு, தி.மு.க., துாண்டிவிட்டு, வக்பு வாரியம் ஆஜராகியது. திருப்பரங்குன்றத்தில், 100 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நடைமுறையை, திரும்பவும் ஆதாரத்தின் அடிப்படையில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த 1995 ல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்தையில் அங்கு தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை என தர்கா தரப்பில் கூறியுள்ளனர். 2005ம் ஆண்டும் கூறியுள்ளனர். அப்படி இருக்க, தர்கா தரப்பினரை தி.மு.க., துாண்டிவிட்டு இந்த நாடகத்தை நடத்துகிறது. தி.மு.க.,மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறது.

நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பில், தர்கா இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் உள்ள துாணில் தீபம் ஏற்றலாம் என தெரிவித்துள்ளார். தீபத்துாணை கோவிலுக்கு சொந்தம் என்று சொல்லும்போது தர்காவிற்கு இதில் என்ன பிரச்னை.

காந்தி பெயரில் உள்ள வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்துள்ளனர். 2005ல் நுாறு நாள் வேலை திட்டம் வந்தபோது கூட காந்தியின் பெயர் இல்லை. 2008-09ல் தான் பெயரை வைத்தனர். காந்தியை மதிக்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி. 2014 பிறகு காந்தியின் பெயரை பல இடங்களுக்கு வைத்துள்ளோம். இதை ஏன் காங்.,பேசவில்லை. புதிய திட்டத்தில் 125 நாள் வேலை கொடுக்கவில்லை என்றால் பென்ஷன் கொடுக்கிறோம். இதை ஏன் தி.மு.க.,சொல்வதில்லை.

550 நீதிபதிபதிகள், வக்கீல்கள், முன்னாள் நீதிபதிகள் சுவாமிநாதனை பதவி இறக்கம் செய்யவேண்டும் என்பது தவறு என கூறியுள்ளனர். இன்று கையெழுத்து போட்ட 120 எம்.பி.,களுக்கு ஜி.ஆர்.சாமிநாதனை பதவி இறக்கும் செய்வதற்கு அல்ல, அவர்கள் பதவி காலியாவதற்கு கையெழுத்து போட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் பிரச்னையில் விஜய் ஏன் கருத்துசொல்லவில்லை என்ற கேள்விக்கு, 'கம்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னும், கும்முன்னு இருக்கவேண்டி இடத்தில் கும்முன்னும் இருக்க வேண்டும். இதை விஜய் தான் கூறியுள்ளார். அரசியலில அப்படி இருக்க முடியமா?

அரசியலில் எவ்வளவு பிரச் னை நடக்கிறது. நான் பேசவே மாட்டேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள். தப்பு என்றால் தப்புன்னு சொல்லுங்கள். சரி என்றால் சரி என்று சொல்லுங்கள். ரோட்டிற்கு அந்த பக்கம் அல்லது இந்த பக்கம் இருங்கள். நடுவில் நின்றால் எப்படி, சாலை நடுவில் வண்டிதான் வரும்.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோற்றார். 2014ல் தி.மு.க., வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஓரே தேர்தலில் 2 எம்.எல்.ஏ.,தான் வெற்றி பெற்றார்கள். அதனால் தோல்வியை பற்றி ஸ்டாலின் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதைபோல், தி.மு.க.,விற்கு முருகனை பார்த்தால் பயம், பா.ஜ., இந்து முன்னணி, பொட்டு வைத்தால், குங்குமம் வைத்தால் பயம் என யாரை பார்த்தலும் பயம். குன்றை பார்த்தாலும், விஜயை பார்த்தும் பயம் என இருண்டுபோய் கிடக்கின்றனர்.

சபரமலையில் பெண்கள் செல்லலாம் என்பது, இந்தனை காலமாக இருந்த பழக்கத்தை தீர்ப்பு மாற்றியது அதனால் எதிர்த்தோம். திருப்பரங்குன்றத்தில் நீண்டகாலமாக இருக்கும் பழக்கத்தை பின்பற்ற நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால் அதைஆதரிக்கிறோம்.

திருமாவளவன் முதலில் தீர்ப்பை படிக்க வேண்டும். திருமாவளவன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தபோது, அங்கு வைத்த திருநீறு , பெண் ஒருவர் செல்பி எடுக்க வந்தபோது, திருநீற்றை அகற்றிவிட்டு செல்பி எடுத்த திருமாவளவன் எங்களை பற்றி பேச அருகதை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

related_post