குமரி மாவட்டத்தில் காணாமல் போன மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு – போலீசாருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன இரு பள்ளி மாணவிகளை 48 மணி நேரத்தில் சென்னையில் வைத்து மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருவட்டார் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள், தினமும் போலவே பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அந்த நாளில் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அச்சத்திற்குள்ளாகி, உடனே போலீசில் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின்பேரில், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பார்த்திபன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பல காவல்துறை அதிகாரிகள், சைப் போலீசார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைக்கப்பட்டனர்.
காணாமல் போன மாணவிகளை கண்டுபிடிக்க, காவல்துறையினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மாணவிகள் கடைசியாக காணப்பட்ட இடங்கள் அடிப்படையில் அவர்கள் சென்னையை நோக்கி பயணித்திருப்பதாக போலீசார் தகவல் பெற்றனர். தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் பயணித்த இடங்களை கண்காணித்து, 48 மணி நேரத்திற்குள் சென்னையில் அவர்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
உடனடியாக சென்னையில் உள்ள காவல்துறையினரின் உதவியுடன், மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த தகவல் பெற்றதும், மாணவிகளின் பெற்றோர்கள் கண்கலங்கி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறையின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது. சமூக ஊடகங்களிலும், பொதுமக்களிடயும், காவல்துறையின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
காணாமல் போன குழந்தைகளை விரைவாக மீட்ட காவல்துறையினருக்கு மாவட்ட மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
BY.PTS NEWS M.KARTHIK