dark_mode
Image
  • Wednesday, 10 September 2025

திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி

திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி

மதுரை : '' திமுகவுக்கு மாற்றாக தேஜ கூட்டணியை தான் மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள், '' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தொடர்ந்து முயற்சி

மதுரையில் அவர் அளித்த பேட்டி: தினகரனும், பன்னீர்செல்வமும் தேஜ கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இரண்டு பேரிடமும் பேச வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இதனையே சொல்லி வருகிறேன். அவர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். அவர்களுக்கு என கொஞ்சம் காலம் வேண்டும். சற்று பொறுத்து இருப்போம். எங்கள் முயற்சியை தொடர்ந்து செய்வோம்.

தினகரன் உடன் கூட்டணி குறித்த பிரச்னைக்கு நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கருத்து சொல்லிவிட்டார். அதனை மீண்டும் மீண்டும் பேசுவது அழகல்ல. பிரச்னை முடிந்துவிட்டது. தினகரன் நல்ல தலைவர். 2024 ல் கூட்டணி வைத்தார். நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர். கருத்து வேறுபாடுக்கு இடம் இருக்காது. இன்னும் எட்டு மாதம் உள்ளது. ஏன் அவசரப்பட வேண்டும்.

களத்தில்


அரசியலை 24 மணி நேரமும் செய்ய வேண்டும். அரசியல் என்பது முழு நேர வேலை. முதல்வர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும்.மக்களுக்கு மாற்றம் தரும் கட்சி என தவெக கூறுமானால், அதே வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மக்களை பார்ப்பேன். மற்ற நாட்களில் மக்களை பார்க்க மாட்டேன் என புதிய கட்சி, பொறுப்பு மிக்க தலைவர் சொன்னால், மக்கள் சோதனை செய்வார்கள். திமுகவுக்கு நாங்கள் எதிரி என தவெக பறைசாற்றினால், அந்த வேகத்தை களத்தில் காட்டும் போது தான் மக்கள் நம்புவார்கள்.

தினமும் கூட்டம்


திமுகவுக்கு மாற்று தேஜ கூட்டணி தான் என மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். தேஜ தலைவர்கள் களத்தில் இருக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் எப்போதும் சந்திக்கலாம். அதிமுக பொதுச்செயலர் பிரசாரத்தில் உள்ளார். பாஜ தலைவர்கள் தினமும் கூட்டம் நடத்துகிறார்கள்.

நாங்கள் தான் மாற்று. விடிவெள்ளி என தவெக சொன்னால், மாதத்தில் 30 நாட்களும், 24மணி நேரமும் களத்தில் இருந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால், அரசியலை எவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்வார்கள் என்ற கேள்வியை மக்கள் வைப்பார்கள்.

கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பது வழக்கமாக நடப்பது தான் . பாஜவுக்கு மறுத்தனர். நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினோம். எதிர்க்கட்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.போலீசை பொறுத்தவரை ஒரு சில இடத்தில் நியாயமான காரணம் உள்ளது. சில இடத்தில் நியாயம் இல்லாத காரணம் உள்ளது. குறை சொல்வதை விட்டுவிட்டு நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும். யார் வேண்டாம் என சொன்னது. ஒரு அதிகாரி அனுமதி மறுத்தார் என்பதற்காக, தவெகவை பார்த்து திமுக எப்போது பயப்படும் என்றால்,24 மணி நேரமும் களத்தில் இருக்கும் போது தான் வரும்.

தொடர்ந்து போலீசார் மீது குற்றச்சாட்டுவைப்பது , காரணம் சொல்வதை அரசியல்வாதியாக, குடிமகனாக ரசிக்கவில்லை.ஒரு இடத்தில அனுமதி கொடுக்கவில்லை என்றால், இன்னொரு இடத்தில் அனுமதி வாங்க வேண்டும். இங்கு வரும் மக்கள், அங்கு வர மாட்டார்களா

அரசு எதிர்ப்பு


மக்கள் எதிர்ப்பு அலை நவம்பர், டிசம்பரில் தெரிய வர வேண்டும். அது தான் முக்கியம். முன்னதாகவே உச்சம் தொடக்கூடாது. ஜனவரி பிப்ரவரியில் உச்சம் தொட்டால் தான் தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும்.

நவம்பர், டிசம்பரில் எதிர்ப்பு அலையை பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மாநாட்டில் மக்கள் பங்கேற்க வேண்டும். அது தான் அரசியலுக்கு அறிகுறி. அதற்கு முன்னர் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை நோக்கிதான் அனைவரும் போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

related_post