ஈரோடு விஜய் பிரசார கூட்டத்திற்கு திரண்ட தொண்டர்கள்: முதல் வரிசையில் இடம் பிடிக்க மும்முரம்!
ஈரோடு: ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க, தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர். முதல் வரிசையில் இடம்பிடிக்க தொண்டர்கள் முண்டியடித்து வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக, ஈரோட்டில் இன்று (டிசம்பர் 18) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இதற்காக இன்று காலை 9:30 மணிக்கு, விஜய் கோவை வருகிறார். சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு அரை மணி நேரம் கட்சியினரை சந்திக்க உள்ளார். அங்கு, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவர் தலைமையில், த.வெ.க., வில் பலரும், இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு பின், விஜய், காலை 11:30 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். காலை 8 மணி முதல் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தவெக தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். முதல் வரிசையில் இடம்பிடிக்க முண்டியடிக்கும் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர். தேசிய நெ டுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக தொண்டர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.