சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 2026ல் அமலுக்கு வரும்
புதுடில்லி: வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசூல் தொழில் நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு (MLFF) மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.இது பயணிகளுக்கு சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முற்றிலுமாக நீக்கும்.
இந்த புதிய தொழில்நுட்பம் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலானது, இது வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் எந்தவித காத்திருப்பும் இன்றி கடந்து செல்ல அனுமதிக்கும். இந்த முயற்சியால் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருளைச் சேமிக்க உதவும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாயை சுமார் ரூ.6,000 கோடி அதிகரிக்கும்.
முன்னதாக, சுங்கச்சாவடியில் பணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை ஆனது.பின்னர், ஃபாஸ்டேக் காரணமாக, அந்த நேரம் 60 வினாடிகளாக குறைந்துள்ளது. இதனால் அரசின் வருமானம் ரூ.5,000 கோடி அதிகரித்துள்ளது. ஃபாஸ்டேக்கிற்குப் பதிலாக MLFF வந்த பிறகு, கார்கள் மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடியைக் கடக்க முடியும்.
மேலும் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை பூஜ்ஜிய நிமிடங்களாக மாற்றுவதே எங்களின் குறிக்கோளாகும். 2026-ஆம் ஆண்டுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.