கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட புதிய மசோதா: எதிர்ப்போம் என்கிறார் ராகுல்
புதுடில்லி: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு தாக்கல் செய்த புதிய மசோதாவை கிராமம் முதல் பார்லிமென்ட் வரை எதிர்ப்போம் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார். இதில் வேலைநாட்கள் 100ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி கொள்கை மற்றும் ஏழைகளின் உரிமைகள் என்ற இரண்டு விஷயங்கள் மீது மோடிக்கு ஆழ்ந்த வெறுப்பு உள்ளது.
மஹாத்மா காந்தியின் கிராம தன்னிறைவு கனவின் ஒரு உயிருள்ள வடிவமாக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் திகழ்கிறது. இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு உயிர்நாடியாக உள்ளது. கோவிட் காலத்திலும் அவர்களின் பொருளாதார பாதுகாப்பு அரணாக இருந்தது.
இருப்பினும், இந்த திட்டம் மீது பிரதமர் மோடிக்கு எப்போதும் எரிச்சல் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறார். இன்று அவர் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முழுமையாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
திட்டத்தையே மாற்றி அனைத்து அதிகாரங்களையும் தனது கைகளில் மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்.
இந்த புதிய மசோதா, மஹாத்மா காந்தியின் லட்சியங்களுக்கு ஒரு அவமதிப்பாகும். மோடி அரசு ஏற்கனவே கடுமையான வேலையின்மையின் மூலம் இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது. இப்போது இந்த மசோதா கிராமப்புற ஏழைகளின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் ஒழிப்பதற்கான வழியாகும்
இந்த மக்கள் விரோத மசோதாவை கிராமங்கள் முதல் பார்லி வரை நாங்கள் எதிர்ப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா எதிர்ப்பு
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட உடன் லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா பேசியதாவது: இந்த புதிய மசோதாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது, கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்ததுடன், அப்பகுதிகளில் பொருளாதாரத்தையும் கடந்த 20 ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்தது. இந்த புரட்சிகரமான இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது, அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் ஏழை மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.