சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!
நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சாதகமாக டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகாரை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே தெரிவித்தார்.
இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அல்லாமல், ஒரு தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது சட்டப்படி நிலைக்காது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி தவிர, சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோரும் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, இது பணமோசடியே நடக்காத, மிகைப்படுத்தப்பட்ட வழக்கு என்று கருத்து தெரிவித்துள்ளார்.