ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; 'டாஸ்மாக்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

'அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில், கடந்த மார்ச்சில் சென்னை, விழுப்புரம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
நிர்வாக இயக்குநர் வீடு சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதன்பின், மே மாதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, 12க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தியது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
அமலாக்கத் துறை தொடர்பான விவகாரங்களில், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், நாங்கள் ஏதேனும் சொல்ல முற்பட்டால், அமலாக்கத் துறைக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை நீதிமன்றம் கூறுவதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
சுட்டிக்காட்டுகிறோம் நாங்கள் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தான் விமர்சிக்கிறோம்; எந்த ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை.
வழக்கத்திற்கு மாறாக விஷயங்களை செய்யும் போது, அதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். யாரையும் குறிப்பிட்டு விமர்சனங்களையும், கருத்துகளையும் கூற வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதை தொடர்ந்து பேசிய அமலாக்கத் துறை வழக்கறிஞர், 'டாஸ்மாக் விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார்.
அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். அதுவரை, அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் கூறினர்.