சென்னையில் தனியாக நடந்து சென்ற 13 வயது சிறுமி

சிறுமியை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற போக்குவரத்து காவலர்
பட்டினம்பாக்கம் அருகே போலீஸ் பூத்தியில் வைத்து பாலியல் தொல்லை
போக்குவரத்து போலீசார் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னையில் மீண்டும் ஷாக்! 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராஃபிக் போலீஸ்காரர் கைது!
சிறுமியிடம் அத்துமீறிய காவலர்... போக்சோவில் கைது - சென்னையில் தொடரும் கொடூரம்
ஆதரவு கேட்டு வந்த 13 வயது சிறுமியிடம், காவலர் ஒருவரே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் சென்னையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை சம்பவம் தொடங்கி, ஈசிஆர் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பெண்களை, ஒரு கும்பல் காரில் துரத்திய சம்பவம் வரை என அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுவரை நடந்த விவகாரங்களின் தாக்கமே மறையாத சூழலில் தற்போது மீண்டும் ஒரு குற்றச் சம்பவம் சென்னையில் அரங்கேறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதரவு கேட்டு வந்த சிறுமியை காவல் நிலையத்திலோ அல்லது அவர்களது வீட்டிலோ ஒப்படைக்காமல் ஒரு காவலரே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
கடந்த ஜன. 25ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தது. 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஐஸ்ஹவுஸ் போலீசார் அச்சிறுமியை மீட்டனர். அச்சிறுமியுடன் இருந்த சிறுமியின் 16 வயது ஆண் நண்பர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக ஆண் நண்பரின் தாயார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது சிறுமியின் வாக்குமூலம்... கடந்த ஜன. 25ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறிய போது பட்டினப்பாக்கம் பகுதியில் நின்றிருந்த காவல் ரோந்து வாகனத்தில் இருந்த காவலரிடம் தான் உதவி கேட்டதாகவும், அப்போது அந்த வாகனத்தில் இருந்த காவலர் ஒருவர் தன்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள போக்குவரத்து காவலர்கள் ஓய்வெடுக்கும் பூத்திற்கு அழைத்துச் சென்று தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை மந்தைவெளி அழைத்துச் செல்லும் போது ரோந்து வாகனத்தில் வைத்தும் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் சிறுமி விசாரணையில் தெரிவித்திருந்தார்.
போக்ஸோவில் போலீசார் கைது
சிறுமி சொன்ன தகவல்களின் அடிப்படையில் ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறில் ஈடுபட்டது மயிலாப்பூர் போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டுனர் ராமன் என்பது தெரியவந்தது. ராமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடந்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரையும் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிறுமியின் ஆண் நண்பர், அவரது தாய் மற்றும் காவலர் ராமன் மூன்று பேர் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டு அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆதரவு கேட்ட சிறுமியை காவலரே சிறுமியிடம் அத்துமீறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.