dark_mode
Image
  • Wednesday, 16 July 2025

நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்

நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்

புதுடில்லி: 'தடைகள் இருந்த போதும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியதால், ஆளுமைக்கான நோபல் பரிசு எனக்கு வழங்க வேண்டும்' என டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதற்கு, 'திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும்' என பா.ஜ., விமர்சித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடந்த, 'தி கெஜ்ரிவால் மாடல்' என்ற தலைப்பிலான பஞ்சாபி புத்தக வெளியீட்டு விழாவில், டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

டில்லியில் தனது அரசாங்கத்தின் பணிகளைத் தடுக்க பலமுறை முயற்சித்த போதிலும், தனது நிர்வாகம் திறம்பட செயல்பட்டது. வேலை செய்ய விடாமல் தடுக்கப்பட்ட போதிலும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். துணைநிலை கவர்னர் மற்றும் பல்வேறு சிரமங்கள் இருந்த போதிலும், சிறப்பாக செயல்பட்டதற்காக, எனக்கு ஆளுகை மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பா.ஜ., கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

இது குறித்து, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று கெஜ்ரிவால் கோருவது நகைப்புக்குரியது. திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். ஊழல் செய்வதற்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்பை தொடர்ந்து கெஜ்ரி.,!

'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்' என கூறி வருகிறார். அதேநேரத்தில் அவர், 'தான் எவ்வளவு செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது' என்று அதிருப்தியை கொட்டி தீர்த்து இருந்தார்.

தற்போது அந்த வரிசையில் டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தனக்கு ஆளுமைக்கான நோபல் பரிசு வேண்டும் என தம்பட்டம் அடித்து உள்ளார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து டில்லி அரசியலில் பரபரப்பான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

related_post