மணல் கொள்ளையை தடுப்பது கலெக்டர்களின் பொறுப்பு: சென்னை ஐகோர்ட்
சென்னை: மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல் பணம் மற்றும் அரசியல் பலத்தால் மாபியா போல் செயல்படுவதாக கூறியுள்ள சென்னை ஐகோர்ட், மணல் கொள்ளையை தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு என உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கு எஸ்எம் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று(டிச.,17) விசாரணைக்கு வந்தது.
அப்போது புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,' மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31க்குள் இந்தப் பணி நிறைவு பெறும்' எனத் தெரிவித்துள்ளது. மேலும், 2020 முதல்2025 நவ., வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை. 5 கோடி ரூபாய் கனிம வள கொள்ளையடித்த வழக்கில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து என்ன பயன் இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
மேலும், அரசியல், பண பலத்தை வைத்துக் கொண்டு,மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கும்பல் மாபியா போல் செயல்படுகிறது. சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மணல், கனிம வளக் கொள்ளையை தடுப்பது மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு.
இது தொடர்பாக புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம மற்றும் மணல் கொள்ளை குறித்து புகார் அளிக்கும் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தாலும் அதனை நிறைவேற்ற வேண்டும். கொள்ளையை தடுக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனர்.