2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: 2026ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கலெக்டர்களிடம் முன்னரே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக்கூடாது. விலங்குவதை தடுப்புச்சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
காளைகளுக்கு தீங்கு எதுவும் ஏற்படக்கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டு உள்ளது போல காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்னரே அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அனைத்து தரப்பினருக்கும், உரிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.
போட்டி நடத்துவது தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். அப்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
குழப்பங்கள், தவறுகளை தவிர்க்க ஒழுங்குமுறையுடன் போட்டிகள் நடத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
மாவட்ட மருத்துவக்குழு நிர்வாகம், வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, விழா ஏற்பாட்டாளர்கள், காளை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் அனைவரும் செயல் பட வேண்டும்.
போட்டி களத்தில் இருந்து வெளியேறும் காளைகளுக்காக கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்படும் காளைகளுக்கு உடனடி சிகிச்சையை அவர்கள் அளிக்க வேண்டும்.
போட்டி களத்தில் பார்வையாளர்கள், வெளிநபர்கள், வீரர்கள் அல்லாதவர்கள் இருக்க அனுமதி இல்லை. அதனை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நெறிமுறைகள், மஞ்சு விரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.