dark_mode
Image
  • Thursday, 21 August 2025

முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை

முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்ற தி.மு.க., பிரமுகரின் மனைவியால் சர்ச்சை எழுந்தது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 32வது பட்டமளிப்பு விழா, நேற்று திருநெல்வேலி அபிஷேகபட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது. கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார். இந்திய புவி காந்தவியல் மைய இயக்குனர் டிம்ரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். பல்கலை துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்றார்.

 

விழாவில், நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, முனைவர் பட்டத்தை கவர்னர் ரவியிடம் இருந்து வாங்க மறுத்து, துணைவேந்தர் சந்திரசேகரிடம் இருந்து பெற்றார். இது பல்கலை பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மைக்ரோ பைனான்ஸ் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஜீன் ஜோசப், தான் முனைவர் பட்டம் பெற்ற நிலையிலும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டது, அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

இவரது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர தி.மு.க., துணை செயலராக உள்ளார். ஜீன் ஜோசப் கூறுகையில், ''கவர்னர் ரவி, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யவில்லை. எனவே, துணைவேந்தரிடம் பட்டம் பெற்றேன்,” என, தன்னுடைய புறக்கணிப்பிற்கு புது விளக்கமும் அளித்தார்.

தி.மு.க., பிரமுகரின் மனைவியான ஜீன் ஜோசப், அரசியல் ரீதியாக, கவர்னர் ரவியை புறக்கணித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

related_post