ராணுவ கூட்டங்களில் பங்கேற்காத ராகுல்

புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வரும் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இதுவரை நடந்த ராணுவத்திற்கான பார்லி., நிலைக்குழுவின் 10 கூட்டங்களில், 2ல் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி அமைந்த பின், பா.ஜ., - எம்.பி., ராதா மோகன் யாதவ் தலைமையில், ராணுவத்திற்கான பார்லி., நிலைக்குழு கூட்டம் அமைக்கப்பட்டது. இதில், ராகுல் உட்பட 31 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை இக்குழு, 10 முறை கூடி விவாதித்துள்ளது. ஆனால், இரண்டு கூட்டங்களில் மட்டுமே ராகுல் பங்கேற்றுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ராகுல், அது தொடர்பான கூட்டங்களில் கூட பங்கேற்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பரேஷன் சிந்துார், சீனா எல்லை பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக, தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வரும் ராகுல், ராணுவத்திற்கான கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை.
பட்ஜெட்டில் ராணுவத்திற்கான நிதி தொடர்பாக ஆய்வு கூட்டம், கடந்த ஆண்டு நவ., 21ல் நடந்தது. முக்கியமான இந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்கவில்லை. ஜன., 9ல், எல்லை சாலை அமைப்பின் மதிப்பாய்வு கூட்டம் நடந்தது. இதிலும், அவர் ஆப்சென்ட். ராணுவ பொதுத் துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உள்ளிட்டவை பற்றி விளக்கக் கூட்டம், பிப்., 18ல் நடந்தது. இதில் ராகுல் பங்கேற்கவில்லை.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பிரதமர் மோடி பலவீனப்படுத்தியதாகக் கூறி வரும் ராகுல், அந்நிறுவனம் தொடர்பான கூட்டத்திலேயே பங்கேற்கவில்லை. இதுபோல பல்வேறு முக்கிய கூட்டங்களில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இது தவிர, 2024 அக்., 15, கடந்த பிப்., 17ல் நடந்த இரு கூட்டங்களில் மட்டுமே ராகுல் பங்கேற்றுள்ளார்.