ஏமாற்று விளம்பரம் வெளியிட்ட 'ராபிடோ'வுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடில்லி: வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் தவறான விளம்பரம் வெளியிட்ட, 'ராபிடோ' நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில், 'ராபிடோ' எனப்படும், 'பைக் டாக்சி' சேவை அமலில் உள்ளது.
புகார்
இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் காரில் விரும்பிய இடங்களுக்கு கட்டணம் செலுத்தி பயணிக்க முடியும். இந்த செயலியை நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
'ராபிடோ' நிறுவனம் தன் விளம்பரத்தில், 'உத்தரவாத பயணம்; ஐந்து நிமிடங்களில் ஆட்டோ அல்லது 50 ரூபாயை திரும்பப் பெறுங்கள்' என, விளம்பரம் செய்திருந்தது.
இந்த விளம்பரம், 120க்கும் மேற்பட்ட நகரங்களில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வெளியானது.
ஆனால், விளம்பரத்தில் குறிப்பிட்டதை போல், 'ராபிடோ' நிறுவனம் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஐந்து நிமிடங்களில் ஆட்டோ வராத நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமாக தராமல், 'ராபிடோ காயின்ஸ்' என்ற பெயரில், அடுத்தடுத்த சவாரிகளில் அந்த பணத்தை கழித்துக் கொள்ளலாம் என்றும், இது ஒரு வாரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
முறையீடு
இது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் பலர், சி.சி.பி.ஏ., எனப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிட்டனர்.
இது தொடர்பாக, கடந்த ஓராண்டில் 1,200க்கும் மேற்பட்ட புகார்களை ஆணையம் பெற்றது. இவற்றை விசாரித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், ராபிடோ நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.