மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் திட்டம் நிறுத்தமா?

சென்னை: மகளிரை தொழில் முனைவோராக்க, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, தமிழக அரசின் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை வரும், 2030க்குள் ஒரு 'டிரில்லியன்' அமெரிக்க டாலர், அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக பொருளாதார வளர்ச்சியில் மகளிர் பங்கை அதிகரிக்க, ஆண்டுக்கு, 20,000 என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் பேரை தொழில் முனைவோராக்கும் திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய தொழில் துவங்க, 20 சதவீத மானியத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில், 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்த உள்ளது.
திட்டத்தை துவக்கி, கடன் வழங்கும் பணிகளை மேற்கொள்ள, அரசிடம் கடந்த ஏப்ரலில் அனுமதி கேட்கப்பட்டது.
பயனாளிகளை தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் தயாராக உள்ளன. இருப்பினும், திட்டத்தை செயல்படுத்த அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்திட்டத்தில், மகளிர் மட்டுமே பயன் பெறுவர். பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி விட்டதால், பலரும் திட்டம் எப்போது துவக்கப் படும் என்று கேட்டு வருகின்றனர். 'அரசு அனுமதி அளிக்காததால், திட்டம் கிடப்பில் உள்ளது' என்றார்.