சிறுநீரகம் போல நாமக்கலில் கல்லீரல் முறைகேடு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை

சென்னை: நாமக்கலில் நடந்த சிறுநீரக முறைகேட்டை தொடர்ந்து, கல்லீரல் திருட்டும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., வினித் தலைமையில் மீண்டும் விசாரணையை துவங்க மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி, ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அ டிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது.
அதே நேரம் உயிருடன் இருப்போர், ரத்த உறவுகளுக்குள் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து கொள்கின்றனர். ரத்த உறவுகள் அல்லாதவர்கள் அளிப்பது குற்றமாக உள்ளது.
இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படு த்தி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு ப குதியை பெற்று, அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, ரத்த உறவுகள் போல போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செ ய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தாண்டி, வேறு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு நடந்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், அலமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசிக்கிறார். அவருக்கு சில லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை அடைக்க புரோக்கர்கள் வாயிலாக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 8.30 லட்சம் ரூபாய் பேரம் பேசி, கல்லீரலில் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளார்.
சிறுநீரக அறுவை சிகிச்சை முறைகேட்டை தொடர்ந்து, கல்லீரல் முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தையும் விசாரிக்க, ஏற்கனவே அம்மாவட்டத்தில் சிறுநீரகம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழக சுகாதார திட்ட இயக்குநருமான வினித் தலைமையில் குழு அமைத்து, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
கல்லீரல் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, யார் காரணம் என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.