பொறுப்பு பெற்றால் மட்டும் போதாது; களத்தில் வேலை பார்க்கணும்: சொல்கிறார் உதயநிதி

“திமுக இளைஞரணியில், ஐந்து லட்சம் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஹிந்தி புகுந்து விடும். அதனால், 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் இலக்கை நிறைவேற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுதும் நகர, பேரூர் வார்டுகள், ஊராட்சி கிளைகள்தோறும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.
இப்படி நியமித்தால், இளைஞரணி நிர்வாகிகள் மட்டுமே, ஐந்து லட்சம் பேர் வருவர். இந்தியாவிலேயே அசைக்க முடியாத ஓர் அமைப்பாக, திமுக இளைஞரணி இருக்கப்போகிறது.
ஒரு கட்சியில் இளைஞரணி என்ற தனி அமைப்பை, இந்தியாவிலேயே முதலில் ஆரம்பித்தவர் கருணாநிதி. அவரால் உருவாக்கப்பட்ட எத்தனையோ அணிகள், கட்சியில் இருந்தாலும், முதன்மை அணியாக இருப்பது இளைஞரணி.
இந்தியாவில் பல கட்சிகள், பூத் கமிட்டி அமைக்க சிரமப்படுகிற நேரத்தில், ஓட்டுச்சாவடிக்கு ஒரு இளைஞரணி அமைப்பாளரை நியமித்து இருக்கிறோம் என்றால், அது நம் சாதனை.