97 சதவீத மக்களிடம் கொரோனா எதிர்ப்பு சக்தி; சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

சென்னை:தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, 97 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்து, பொது சுகாதாரத் துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, கொரோனா பரவல் துவங்கியபோது, 32 சதவீதமாக இருந்த நோய் எதிர்ப்பு சக்தி அளவு, தற்போது, 97 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி, உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறையால் நோய் சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு தான் உள்ளது; இது வீரியமற்றது; உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாட்களில் குணமடைந்து விடுகின்றனர்.
இந்தாண்டு கொரோனா நோய் பாதிப்புகளுக்கான தீவிர தன்மை குறித்து கண்டறிய, பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 1,214 முதியவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 97 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, ஒமைக்ரான் போன்ற வீரியமற்ற கொரோனா, அவர்களை பெரியளவில் பாதிக்காது.
எனினும் கொரோனா பாதிக்காது என கூறவில்லை. முதியோர், இணை நோயாளிகள், கர்ப்பிணியர் ஆகியோர், பொது இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.