dark_mode
Image
  • Thursday, 17 July 2025

உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் இன்று துவக்கம்; முதல்கட்டமாக 3,563 இடங்களில் முகாம்

உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் இன்று துவக்கம்; முதல்கட்டமாக 3,563 இடங்களில் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டத்தில் இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார். முதல்கட்டமாக, 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன,'' என்று, அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை செயலர் அமுதா கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

 

கடந்த 2021 முதல், முதல்வர் சுற்றுப்பயணம் செல்லும் போது, அவரிடம் மக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

 

அவற்றுக்கு, முதல்வர் தனிப்பிரிவு வாயிலாக தீர்வு காணப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில், 100 பேருடன் அரசு 'கால் சென்டர்' இயங்கி வருகிறது. இங்கு, '1100' என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் குறைகளை தெரிவிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

 

பொதுமக்கள் நேரடியாக புகார் செய்ய, தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்த மூன்று அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, முதல்வரின் முகவரி துறை இயங்கி வருகிறது.

 

1.01 கோடி மனுக்கள்

 

இத்துறையின் வாயிலாக, நான்கரை ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

 

பொதுமக்களை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சென்று சந்திக்க, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன.

 

இதற்காக, நகரப்பகுதிகளில், 2023 நவம்பர் முதல், 2024 ஜனவரி வரை முதல்கட்டமாக, 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஊரகப் பகுதிகளில், 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை, 2,304 முகாம்கள் நடத்தப்பட்டன

 

இதன் வாயிலாக பெறப்பட்ட 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்டமாக, எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த ஜனவரி முதல், 433 முகாம்கள் நடத்தப்பட்டன.

இவற்றில், 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 1.47 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் இன்று துவக்கப்பட உள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். பல முகாம்கள் நடப்பது, பொது மக்களுக்கு தெரியவில்லை என்கின்றனர்.

எனவே, ஒரு லட்சம் தன்னார்வலர்களை நியமித்து, இது குறித்து வீடு வீடாகச் சென்று, ஒரு வாரத்திற்கு முன்பே தகவல்களை தெரிவித்துள்ளோம். எந்தெந்த திட்டத்தில் பயன் பெற என்னென்ன தகுதிகள், ஆவணங்கள் வேண்டும் என்ற விபரங்களையும் துண்டறிக்கை வாயிலாக வழங்கியுள்ளோம்

இரு கவுன்டர்கள்

 

நகர்ப்புறங்களில், 13 துறைகள் வாயிலாக 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில், 15 துறைகள் வாயிலாக 46 சேவைகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.

பட்டா தொடர்பான சேவைகளுக்கு இரண்டு கவுன்டர்கள், பிற துறைகளுக்கு 13 கவுன்டர்கள், ஆதார் சேவைக்கு இரண்டு கவுன்டர்கள், இ - சேவைக்கு இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன.

 

இங்கு பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். இன்று துவங்கி நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடத்த உள்ளோம்.

 

நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இன்று துவங்கி ஆகஸ்ட் 15 வரை, முதற்கட்டமாக 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 1,428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்களும் நடக்க உள்ளன.

இதற்காக, 28,370 தன்னார்வலர்கள் வாயிலாக, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முகாம்களில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்பர். ஒரு மாவட்டத்திற்கு, ஒரு நாளைக்கு ஆறு முகாம்கள் நடத்தப்படும்.

வாரத்திற்கு நான்கு நாட்கள் செவ்வாய் முதல் வெள்ளி வரை முகாம் நடக்கும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தர, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், ஓய்வெடுப்பதற்கு ஷாமியானா பந்தல், இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

முகாம் எங்கெங்கு நடக்கிறது என்ற விபரத்தை அறிய, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற இணையதளமும் இன்று துவக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல், இதில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

related_post