dark_mode
Image
  • Wednesday, 16 July 2025

பொது தொகுதியில் எஸ்.சி., வேட்பாளர்: தி.மு.க., தலைமை அதிரடி முடிவு

பொது தொகுதியில் எஸ்.சி., வேட்பாளர்: தி.மு.க., தலைமை அதிரடி முடிவு

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், பொதுத் தொகுதியில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி மற்றும் வேட்பாளரை அடையாளம் காணும் பணியில், அக்கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

 

'சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக, முழு அர்ப்பணிப்புடன் தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.

அதற்கு ஏற்ப, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'சமூக நீதி அரசு' என்றால், தி.மு.க., ஏன் பொதுத் தொகுதியில், எஸ்.சி., வேட்பாளரை நிறுத்துவதில்லை? தி.மு.க.,வில் திறமையான நபராக விளங்கும் ஆ.ராஜா, கடந்த லோக்சபா தேர்தலில், தன் சொந்த மாவட்டமான பெரம்பலுாரில் போட்டியிடாமல், தனி தொகுதியான நீலகிரியில் ஏன் போட்டியிட்டார்' என, கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில், பொதுத் தொகுதியில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை, வேட்பாளராக களமிறக்க, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப, தொகுதி மற்றும் வேட்பாளரை அடையாளம் காணும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.

கடந்த தேர்தலில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது.

எனவே, இம்மாவட்டங்களில் ஒரு தொகுதி, குறிப்பாக சென்னையில் படித்தவர்கள், எஸ்.சி., சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி, தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

related_post