dark_mode
Image
  • Tuesday, 09 September 2025

210 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் பேட்டி

210 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் பேட்டி

சென்னை; சட்டசபை தேர்தலில் அதிமுக-திமுக இடையே தான் நேரடி போட்டி, அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இபிஎஸ் கூறி உள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே 4 முறை வெளிநாடு பயணம் சென்றிருக்கிறார். இது 5வது முறை என்று கருதுகிறேன். 5 முறை வெளிநாடு செல்கிற போது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக செல்கிறேன் என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் செல்கிறார்.

ஆனால் இந்த 5 முறை வெளிநாட்டு பயணத்தின் போது எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா? அதோடு, ஏற்கனவே தொழில் முதலீட்டு மாநாட்டை சென்னையில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்கள். பல்வேறு காலக்கட்டத்தில் தொழில் செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது.

ஆக, திமுக ஆட்சிக்கு வந்த இந்த 52 மாத ஆட்சியில் எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? எத்தனை தொழில்கள் நடைமுறைக்கு வந்தன? அதனுடைய நிலவரம் என்ன? எத்தனை தொழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது? அதனால் எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்?

அதற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பலமுறை தெரிவித்தேன். இதுவரைக்கும் பதிலே இல்லை. வெறும் காகித அளவிலேதான் இருக்கிறது. இன்னும் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

இதுவே அதிமுக ஆட்சி நடக்கும் போது, 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்தினார். 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து அதனால் தொழில்வளம் பெருகி, பொருளாதார ஏற்றம் பெற்று, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெற்றது. அதே வழியில் வந்த அதிமுக அரசு 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி சுமார் 3 லட்சத்து 5000 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட தொழில்கள் எல்லாம் பல தொழில்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதனால் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இன்றைக்கு ஒரு அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனே அந்த தொழில் வந்துவிடுவது கிடையாது. அதற்கு முதல்கட்ட பணிகள் செயல்படுத்த வேண்டும். அந்த முதல்கட்ட பணி செய்வதற்கே 2 வருட காலம் பிடித்துவிடும். அதற்கு பிறகு அவர்கள் அதில் முதலீடு செய்து அதற்கு உண்டான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு, பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும்.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழில் முதலீடு வந்ததாகவும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுவது பொய்யான செய்தியை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதுதான் பார்க்கப்படுகிறது.

திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு. நிர்வாக திறமையில்லாமல் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எப்பொழுதும் திமுக இரட்டை வேடும் போடுகின்ற கட்சி. இன்றைக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு, சமூக நீதி தமிழகத்திலே மறுக்கப்பட்டு விட்டது. திண்டிவனம் பகுதியில் ஒரு நகராட்சியில் நடந்த சம்பவம். நகராட்சியில் ஒரு ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிபுரிந்து வருகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.

அவரை நகராட்சி ஆணையாளர் அறைக்கு வரச்சொல்லி, அறையில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காட்சி தொலைக்காட்சியில் பார்த்தோம். பட்டியலித்தைச் சேர்ந்த அதிகாரி என்பதால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு விழா நடைபெற்றது. அந்த அரசு விழாவிலே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கலந்து கொள்கிறார், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அந்த நிகழ்ச்சியிலே நகர்மன்ற துணை தலைவர், மாவட்ட அமைச்சர் அருகில் அமர்ந்திருக்கிறார். நகர் மன்ற தலைவர் பெண்மணி, பட்டியலினத்தவர். பின் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். ஆக. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு அவமரியாதை செய்வது இதில் இருந்து தெரிகிறது.

related_post