dark_mode
Image
  • Tuesday, 09 September 2025

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவா?.. தோல்வி பயத்தில் திமுக அரசு - தவெக கண்டனம்!

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவா?.. தோல்வி பயத்தில் திமுக அரசு - தவெக கண்டனம்!

புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தவெக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியில் சுற்றுப் பயணம் தொடங்க இருக்கிறார். அதே நாளில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார். இதற்காக காவல் துறையிடம் அதிகாரிகளிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று மனு அளித்து வருகிறார். ஆனால், காவல் துறை பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி தர மறுப்பதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் நேரடியாக சென்று காவல் அதிகாரிகளிடம் பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு அளித்தார்.

அப்போது காவல் துறைக்கு அளிக்கும் மனுவை கோயிலில் வைத்து புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்தபோது ஏராளமான தவெகவினர் கூடினர். போலீசார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லவில்லை என்றதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி கூட்டம் கூடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ், “தவெக மதுரை மாநாட்டின் மிகப்பெரிய வெற்றியால் மிரட்சி அடைந்துள்ள ஆளுங்கட்சி, தன் பயத்தையும், இயலாமையையும் வெவ்வேறு வகைகளில் வெளிக்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர்
விஜய்யின் பரப்புரை பயணத்திற்கான திட்டமிடலுக்காக திருச்சி சென்றபோது... கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி உங்களைப்போல் ஆள் பிடித்துக் கூட்டம் காட்டும் தேவை எங்களுக்கு இல்லை; தமிழக வெற்றிக் கழக நிகழ்வு என்றாலே தன்னெழுச்சியாக இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதுதான் தவெக-வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு” என்று தெரிவித்தார்.

நம் மக்கள் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல், தனது கையாலாகாதனத்தை மறைப்பதற்காக காவல்துறை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றதோடு, தோல்வி பயத்தில் நீங்கள் போடும் ஒவ்வொரு வழக்கும் எங்கள் வெற்றிக்கான ஏணிப்படியே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல தவெக ஐடி விங் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், “எங்களது கழக தலைவருக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவை பார்த்து பயந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் திமுக அரசு,

கடந்த வாரம் எங்கள் தலைவர் அண்ணன் விஜய்யின் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க சென்ற கழக பொது செயலாளர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது. எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 

related_post