பாஜக தலைமையில் புதிய அணி? டிசம்பரில் இருக்கு சம்பவம்-ஆட்டத்தை மாற்றும் அண்ணாமலை

தமிழக அரசியலில் டிசம்பர் மாதம் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக அதிமுக உள்கட்சி பிரச்சனைகள், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் அரசியல் நகர்வுகள், பாஜகவின் கணக்குகள் ஆகியவை இணைந்து மாநில அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்றே பேசப்படுகிறது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஒரு உறுதியான அணியாக இயங்கினாலும், பாஜகவுடன் இணைந்திருக்கும் போக்கில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. டிடிவி தினகரன் தொடர்ந்து டிசம்பரில் கூட்டணி அறிவிப்பு எனக் கூறி வருகிறார். அதேபோல ஓபிஎஸ் பாஜகவுக்கு விசுவாசமான நபராக மாறிவிட்டார் என்பது அவரது அணுகுமுறையிலிருந்தே வெளிப்படுகிறது. மத்திய அமைச்சர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, மோடி-அமித்ஷா மீதான நம்பிக்கை ஆகியவை இதற்கான சான்றுகளாக பார்க்கப்படுகின்றன.
அண்ணாமலை சமீபத்தில் பாஜக உள்கட்சி விவாதங்களில் ரிபல் போன்று வெளிப்படுத்தப்பட்டாலும், அரசியல் பார்வையாளர்கள் அவரை மத்திய தலைமைக்கான நம்பிக்கையாளர் என்றே கருதுகின்றனர். 40 வயதிலேயே அரசியலுக்குள் வந்துள்ள அவர், பாஜகவின் நீண்டகால அரசியல் திட்டங்களில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பரில் ஆட்டத்தை மாற்றும் அண்ணாமலை என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில்...
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது ஒருங்கிணைந்த அதிமுக திட்டத்தில் இணைந்து செயல்படவில்லை என்றால், பாஜக தனியே ஒரு மெகா கூட்டணி உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிறு கட்சிகள் இணைக்கப்பட்டு, 2024 லோக்சபா தேர்தலில் பெற்ற 18% வாக்கை மேலும் உயர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படலாம்.ஆனால், ஒருங்கிணைந்த அதிமுக உருவாகாமல் போனால் 2026 தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லை யென்றே பாஜகவும் அறிந்திருக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நட்புறவை தொடர்வார்களா, இல்லையெனில் வேறு அணியை உருவாக்குவார்களா என்பது டிசம்பரில் தீர்மானமாகலாம்.
செங்கோட்டையன் விவகாரம்
சசிகலா அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கடிதம் எழுதியிருப்பதும், செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களைச் சந்தித்திருப்பதும், தினகரனின் டிசம்பர் கூட்டணி அறிவிப்பு பேச்சும் அனைத்தும் ஒரே திசையைக் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதாவது, அதிமுக உள்கட்சி பிளவை பயன்படுத்தி பாஜக தனது வலுவை கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது.2026 சட்டமன்றத் தேர்தலை விட 2029 பாராளுமன்றத் தேர்தலையே குறிக்கோளாக வைத்திருக்கும் பாஜக, டிசம்பருக்குள் புதிய அணிகள், புதிய கூட்டணிகள் உருவாகும் சூழலை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரின் நகர்வுகள் அனைத்தும் டிசம்பரில் ஆட்டத்தை மாற்றும் அண்ணாமலை என்ற தலைப்புக்கு வலுவூட்டுகின்றன.