ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு

'ஊழல், முறைகேடுகளில் சிக்கி, மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், ஓரிரு மாதங்களில் தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள வேண்டும்; அலட்சியம் காட்டினால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அவமானப்பட வேண்டிய சூழல் வரும்' என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உள்ளனர். கடந்த, 2021ல் கைகோர்த்த அதே கட்சிகளுடன் தி.மு.க., மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது.
அதேபோல், அ.தி.மு.க.,வும் தேர்தல் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.
அத்துடன், த.வெ.க., - நா.த.க., ஆகிய கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முயற்சித்து வருகிறது. இதனால் வரும், 2026 தேர்தல் கடும் சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை நன்கு உணர்ந்துள்ள தி.மு.க., தங்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என, உறுப்பினர்கள் சேர்க்கையை துவக்கி உள்ளது. இதுவரை, 1.35 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அதேபோல், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகள் என, பெரும்பான்மை தி.மு.க., வசம் உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகளை ஒழுங்குப்படுத்துவதோடு, பலப்படுத்தும் வகையில், தற்போது தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.
அதன்படி, ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு, அதிக புகார்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை பெற்றுள்ள கவுன்சிலர்கள் பட்டியலை தி.மு.க., தலைமை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக சென்னையில், 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, சாலை பணிகள், மழைநீர் வடிகால்வாய் பணிகள், கேபிள் பதிப்பு போன்ற திட்ட பணிகளுக்கு கமிஷன் பெறுதல், புதிதாக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான வரைபட அனுமதி மற்றும் பழைய கட்டட இடித்தலுக்கான அனுமதி ஆகியவற்றிலும், கவுன்சிலர்கள் லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிட மாற்றம், புதிய நியமனம் ஆகியவற்றிலும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதுடன், மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதில் மெத்தனம் காட்டியதாக, 20 பேர் மீது குற்றச்சாட்டு தி.மு.க., தலைமைக்கு சென்று உள்ளது.
இதுதவிர, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும் பெயரை கெடுத்துக் கொண்ட கவுன்சிலர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், உள்ளாட்சி அமைப்புகளை சீர்படுத்தும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை, ஏற்கனவே தலைமை எச்சரித்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே அதிருப்தி பெற்று இருக்கும் கவுன்சிலர்கள் சிலரை தாங்களாகவே, உடல்நல குறைவு போன்ற தனிப்பட்ட காரணங்களை கூறி பதவி விலகி கொள்ள தலைமை உத்தரவிட்டுள்ளது.
உரிய குற்ற ஆவணங்களுடன் சிக்கியுள்ள கவுன்சிலர்களிடம், தலைமையில் இருந்து நேரடியாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு ராஜினாமா செய்ய முன் வராமல் அலட்சியம் காட்டினால், 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்படுவீர்; அப்படி செய்தால் அது உங்களுக்குத்தான் அவமானம்' எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே நான்கு கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் அந்தந்த உள்ளாட்சிகளில் ஓரிருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய அறிவிப்பால், தி.மு.க., மட்டுமின்றி கூட்டணி கவுன்சிலர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில், தலைமை பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றும். இவ்வாறு அவர்கள் கூறினர்