dark_mode
Image
  • Saturday, 10 May 2025

தமிழகத்தில் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை

சென்னை: தமிழகத்தில் வரும் 8 ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் விரிவான அறிக்கை:

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில், வரும், 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, மதுரை, திருச்சியில் தலா 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.4 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

ஈரோடு, கரூர் பரமத்தி, திருத்தணியில் தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம்; பாளையங்கோட்டை, சேலம், புதுச்சேரி நகரங்களில், 100 டிகிரி பான்ஹீட்டுக்கு மேல் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

மழையுடன் துவங்கிய அக்னி!

பொதுவாக மே, 4 முதல் 28 வரையிலான, 25 நாட்கள், அக்னி நட்சத்திர காலமாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில், வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர காலம், நேற்று துவங்கியது. காலை முதல் வெப்பம், 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவான நிலையில், பிற்பகலில், மேகமூட்டம் ஏற்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில், 3 செ.மீ., மழையும், பூந்தமல்லியில், 2 செ.மீ., மழையும் பெய்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே, இதமான மழையுடன் துவங்கியுள்ளது.

comment / reply_from

related_post