dark_mode
Image
  • Thursday, 17 July 2025

தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சென்னை: ரூ.2 கோடி சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில் குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 28) நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.

அப்போது அவர் சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கை மறு விசாரணை செய்யும்படி திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடி வாய்க்கொழுப்பு பேச்சு காரணமாக பதவி இழந்துள்ளார். செந்தில்பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் சிக்கி பதவி இழந்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் சிக்கலில் உள்ளனர். தற்போது ஐ.பெரியசாமிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

related_post