dark_mode
Image
  • Thursday, 17 July 2025

முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு

முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு

சிறையில் உள்ள 'போலீஸ்' பக்ருதீன் உட்பட மூவரை விடுவிக்ககோரி ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த 'போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் புழல் சிறையில் உள்ளனர். இவர்களை சந்திக்க குடும்பத்தினரை சிறை நிர்வாகம் அனுமதிக்காதநிலையில், சிறைக்குள் கொல்ல சதி நடப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். நேற்று மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் மூவரின் குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறியதாவது: மூவரும் விசாரணை கைதிகளாகவே 15 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களை சிறையில் அடித்து சித்ரவதை செய்கிறார்கள். குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என முதல்வர் சொல்கிறார். அதற்காக சிறையிலேயே வைத்து பாதுகாப்பீர்களா. முஸ்லிம் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை. உடல்நிலை காரணம் கருதி விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதை கண்டித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும். அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டால் சிறையை முற்றுகையிடுவோம்.

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்தது போல் மற்ற மாநகராட்சியிலும் நடந்திருக்காது என்பது என்ன நிச்சயம். திருடர்களை அதிகாரத்தில் வைத்தால் திருடத்தான் செய்வார்கள். இவ்வாறு கூறினார்.

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் ரஹீம், முன்னாள் செயலாளர் ராஜா உசேன், ஜமாத் தலைவர் காஜா முகைதீன், செயலாளர் அக்பர்அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

related_post