வாக்கு கொடுத்தபடி ராஜ்யசபா 'சீட்' தாருங்கள்: பிரேமலதா

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:
கடந்த 2024ம் லோக்சபா தேர்தலின்போது, 'தே.மு.தி.க.,வுக்கு ஐந்து எம்.பி., சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படும்' என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உறுதியளித்தபடியே, அதை செய்வர் என இதுவரை நம்புகிறோம். ஒருவேளை ஒப்பந்தத்தை மீறி, அ.தி.மு.க., தரப்பில் 'சீட்' கொடுக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ, அதை தே.மு.தி.க., செய்யும்.
என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதற்காக யாரிடமும் போய் கெஞ்சப் போவதில்லை. தி.மு.க., லோக்சபா தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடியே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளனர். இது மிகச்சிறந்த அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.
அரசியலில் நம்பிக்கையும் நேர்மையும் வார்த்தையும் தான் முக்கியம். அந்த வார்த்தைப்படி நடப்பவர்கள் மேல்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஏற்கனவே, இரண்டு முறை வந்த வாய்ப்பை, ஒருமுறை அன்புமணிக்கும், வாசனுக்கும் கொடுத்தனர்.
அதை தே.மு.தி.க., மனதார ஏற்றுக்கொண்டது. எனவே, இம்முறை தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டியது அ.தி.மு.க.,வின் கடமை. தான் சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து, பழனிசாமி அதை காப்பார் என காத்திருக்கிறோம்.