பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது.
காங்கிரசைச் சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ''பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கும், நம்முடைய ராணுவத்துக்கும் துணை நிற்போம்,' என தெரிவித்துள்ளார்.
'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நேற்று காலை பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
காங்., - - எம்.பி., சசிதரூர், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டுகிறேன். நம் ராணுவத்துக்கு உறுதியான ஆதரவை அளிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் ஏராளமான பதிவுகளை போட்டு பாராட்டி தள்ளியதோடு, 'பயங்கரவாத தேசமான பாகிஸ்தானுக்கு இன்னும் கடினமாக பாடம் புகட்ட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
'ஆபரேஷன் சிந்துார்' வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு, சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்தது. ஒட்டு மொத்த தேசமும், பிரதமர் மோடியின் தலைமையால் பெருமிதம் அடைவதாக பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், ராணுவமும், பிரதமர் மோடியும் சரியான பதிலடியை கொடுத்ததாக தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்2கிரசின் தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்காக ராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்தனர். உ.பி., முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரும் பாராட்டினர்.
'பிரதமர் மோடி தலைமையில் ஒவ்வொரு பயங்கரவாதியையும் வேட்டையாடுவோம்' என முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில் கொல்லப்பட்ட மஹாராஷ்டிராவின் சந்தோஷ் ஜக்டேலின் மனைவி பிரகதி, ''விஷயம் கேள்விப்பட்டதுமே என் கண்களில் கண்ணீர் கசிந்தது. நாம் மவுனமாக இருக்க மாட்டோம் என பாகிஸ்தானுக்கு உணர்த்தியபிரதமர் மோடி, நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவார்,' என்றார்.
பஹல்காமில் பலியான அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி டேஜ் ஹெய்ல்யாங்கின் மனைவி சரோகம்குவா, உ.பி.,யை சேர்ந்த சுபம் திவேதியின் மனைவி அஷன்யா, கஸ்துப் கன்போத்தின் மனைவி சங்கீதா, கர்நாடகாவின் மஞ்சுநாத் ராவின் தாய் சுமதி என உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என தெரிவித்துள்ளனர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description