dark_mode
Image
  • Tuesday, 20 May 2025

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி

முரசொலி செல்வம் உடலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுத சம்பவம் அவரின் குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.

முரசொலி செல்வம் உடலை பார்த்து இன்று அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடைந்து போய் கண்ணீர்விட்டனர்.

முரசொலி செல்வமின் இறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்., என்று கலக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவரின் உடலை பார்த்த ஸ்டாலின் கதறி கண்ணீர்விட்டார்.

முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எங்கே போனீங்க... செல்வம் மாமா! என்று வெளியிட்ட இரங்கலில், திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி. செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.

இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது.

கலைஞர் அவர்களின் மூத்தப் பிள்ளையான முரசொலியுடனே வளர்ந்தவர் - முரசொலியை வளர்த்தவர். கலைஞருக்கு முரசொலி மாறன் மாமா மனசாட்சி என்றால், நம் தலைவர் அவர்களுக்குத் தோளோடு தோள் நின்ற கொள்கை வீரர் செல்வம் மாமா. கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மாமாவின் நெருங்கிய நண்பரான முரசொலி செல்வம் மாமா, கழகப் பொதுச் செயலாளரிடம் எப்படி உரிமையோடு பழகுவாரோ, அதே உரிமையோடுதான் கடைக்கோடித் தொண்டனிடமும் பழகும் பண்பைப் பெற்றிருந்தார். சிறியவர் - பெரியவர் வித்தியாசமின்றி எல்லோரிடமும் மரியாதையுடன் பேசுகிற வழக்கத்தைக் கொண்டவர் அவர்.

75 ஆண்டுகளைக் கடந்து விட்ட முரசொலியின் நீண்ட நெடியப் பயணத்தில், செல்வம் மாமா பதித்தத் தடங்கள் ஏராளம். 'முரசொலி'யில் வந்த செய்திக்காக சட்டமன்றக் கூண்டிலேறி நெஞ்சுரத்துடன் பதில் சொன்ன அவருடைய உறுதிதான் இன்றைக்கு எங்களை எல்லாம் வழி நடத்துகிறது. 'முரசொலி நினைவலைகள்' என்று அவர் எழுதிய அனுபவங்கள் அத்தனையும் திராவிட இயக்க இளைஞர்களுக்கு வழிகாட்டும் பாடங்கள். 'சிலந்தி' என்ற புனைப்பெயரில் முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் சிரிக்கவும் - சிந்திக்கவும் - சிலிர்க்கவும் வைக்கும்.

என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டிருந்த செல்வம் மாமா, என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடன் நின்று ஆலோசனைகளை வழங்கியவர். இன்றைய முரசொலியில் கூட, என்னைப்பற்றி ஒரு பத்தியை எழுதியிருக்கிறார் என்று எண்ணும் போது அவரது இழப்பைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

முரசொலியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை கலைஞர் அவர்கள் என்னிடம் தந்த போது, என்னை அழைத்த செல்வம் மாமா, "முரசொலியின் பயணமும் - வீச்சும் உனக்குத் தெரியும் உதய். அதை மனசுல வச்சு, பணிகளைச் செய்,"என்று வாழ்த்தினார்கள்.

இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்ற போது, "40 வருஷம் தலைவர் அவர்கள், இளைஞர் அணியை வளர்த்தெடுத்து இருக்காங்க. அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இளைஞர் அணியை நீ வழிநடத்துறது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு உதய். இதை நீ சரியாகப் பயன்படுத்திக் கொள். சென்னையிலேயே இருந்திடாம தமிழ்நாடு முழுக்க பயணம் பண்ணு. இளைஞர்களைச் சந்திச்சு, அவங்கள எல்லாம் நம் இயக்கத்திற்குள் கொண்டு வா," என்று உரிமையோடு எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்ல, 2019 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் நான் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற போதெல்லாம், ஒவ்வொரு நாளும் என்னுடைய பேச்சுக்களைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அவைப்பற்றி தொலைபேசியில் அழைத்து அவருடைய கருத்துகளைக் கூறுவார்.

"உன் பிரச்சாரத்தை டி.வி.யில பார்த்தேன் உதய். உன் பேச்சு ரொம்ப எளிமையா, மக்களுக்குப் புரியுற மாதிரி இருக்கு. எல்லாரும் ரசிக்கிறாங்க. ஆகவே, யாரையும் காயப்படுத்தாம பேசு. இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் உன் பாணியில் கொண்டு சேர்த்திடு உதய். நீ சொல்ற விஷயத்தை எதிர்க்கட்சிக்காரங்களும் கவனிக்கிற மாதிரி, அவங்களும் எடுத்துக்கிற மாதிரிப் பேசு," என்று வழிகாட்டிய முரசொலி செல்வம் மாமாவின் தொலைபேசி அழைப்புகள், இனி, அறவே வராது என்பதை ஏற்க மனது மறுக்கிறது, என்று உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக கூறி உள்ளார்.

முரசொலி செல்வம் உடலை பார்த்ததும்.. கண்ணீர்விட்டு உடைந்து அழுத ஸ்டாலின்.. கலங்கி நின்ற உதயநிதி

comment / reply_from

related_post