வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம்..!

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே திசையில் நகர்ந்து, ஆகஸ்ட் 19-ஆம் தேதி அதிகாலை ஒடிசா - ஆந்திரா கடலோர பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை நிகழ்வின் காரணமாக, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.