அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி

வாஷிங்டன்: வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இன்று இந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிப்ரவரியில், வரி குறைப்பு மற்றும் நாட்டின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தும் 'பெரிய அழகிய மசோதா'வை கொண்டு வந்தார். இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டது. அதில், தனிநபர் வருமான வரிகள், தொழில் வரிகள் மற்றும் பிற வரி வகைகளை குறைத்திருந்தனர். இதனால் அரசுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் 4.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மசோதாவை அமெரிக்கா காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. மொத்தம் 218 பேரில் 214 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தற்போது அதிபர் டிரம்ப்பின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ' இந்த மிகப்பெரிய மசோதா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. இது அமெரிக்காவை ராக்கெட் வேகத்தில் முன்னேற்றும். மிகப்பெரிய வரி குறைப்பு, எல்லை பாதுகாப்பு என அனைத்தையும் இந்த மசோதா உள்ளடக்கியது,' என அவர் தெரிவித்தார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட பதிவில், இந்த மசோதாவை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியளிக்கிறது. வரி குறைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புக்கான நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன,' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் விதிக்கப்படும் 5 சதவீதம் வரி விதிப்பை ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஆண்டுக்கு 2.68 லட்சம் கோடி ரூபாயை நம் நாட்டுக்கு அனுப்புவது குறிப்பிடத்தக்கது.