அமைச்சர்கள் எல்லாரும் சென்னையை விட்டு கிளம்புங்கள்!: தேர்தல் வேலையை துவங்க ஸ்டாலின் கட்டளை

சென்னை: 'அமைச்சர்கள் எல்லாரும் சென்னையை விட்டு கிளம்புங்கள்; அவரவர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பேசி, தேர்தல் வேலையை துவங்குங்கள். வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி வாய்ப்பு இருப்பவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாக கூறப்படுவதாவது:
தி.மு.க., பலமே, அதன் குக்கிராமங்கள் வரை இருக்கும் கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாக கட்டமைப்பு, எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை, காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.
எந்த பணியிலும் தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதை மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உழைப்பால் வெல்ல வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.
எதிர்கொள்வோம்
தமிழகத்தில் எப்படியாவது காலுான்றி விட வேண்டும் என பா.ஜ., நினைக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி மிரட்டி, அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து, அ.தி.மு.க.,வை பா.ஜ., அடக்கி விட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ., கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால், பா.ஜ., கூட்டணியை ஏற்று விட்டார்.
தி.மு.க., எல்லா காலகட்டங்களிலும் இது போன்ற சோதனைகளை, நெருக்கடிகளை எதிர்கொண்ட இயக்கம் தான். அரசியல் ரீதியாக தி.மு.க.,வை வெல்ல முடியாதவர்கள், இது போன்ற மிரட்டல்களால் அசிங்கப்படுத்த நினைப்பர். அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை மக்கள் அறிவர். எனவே, மத்திய பா.ஜ., அரசின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.
கடமை
சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை குறைத்துக் கொண்டு, அவரவர் மாவட்டங்களுக்கு சென்று, அதிக நாட்களை செலவிடுங்கள்; தேர்தல் வேலையை துவங்குங்கள்.
ஒவ்வொரு கிராமம், வார்டு வாரியாகச் சென்று, எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் மக்களை சந்திக்க வேண்டும்; தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை சொல்ல வேண்டும்; மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர் யாரோ, அவர் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்; திறமை வாய்ந்தவர் மட்டுமே நிறுத்தப்படுவார்.
அவரை வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டியது, மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் கடமை.
பவள விழா கொண்டாடிய தி.மு.க., ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்க, கோடிக்கணக்கான தி.மு.க., தொண்டர்களே காரணம் என்பதை நான் அறிவேன். அதை, அனைத்து இடங்களிலும் நான் சொல்லி வருகிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், தி.மு.க., கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் காரணம். அந்த நன்றி உணர்வோடு தான் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பொது மேடைகள், சமூக வலைதளங்களில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்; கருத்துகளை பதிவிட வேண்டும். நம்மை சுற்றி எங்கும், 'கேமரா' இருப்பதை உணர வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கட்சிக்கும், ஆட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description