dark_mode
Image
  • Thursday, 21 August 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளருமாக இருப்பவர் ஐ.பெரியசாமி . திண்டுக்கல் மாவட்டத்தின் திமுக முகமாக செல்வாக்கோடு வலம் வரும் இவர், திமுக தலைமைக்கும் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமை வழிச் சாலை மற்றும் திண்டுக்கல் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருக்கும் ஐ.பெரியசாமி அறையிலும் சோதனை நடந்து வருகிறது. இதுதவிர சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் உள்ள அவர் தொடர்புடைய பல இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

 
பழனி சட்டமன்ற உறுப்பினரும், ஐ.பெரியசாமி மகனுமான ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் வீடுகளிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 2006 - 2011 வரை அமைச்சராக இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.1 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டு அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டதை கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததோடு, மீண்டும் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.


இதேபோல வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அலுவலத்தில் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி 8 மணி நேரம் வரை விளக்கம் அளித்திருந்தார். அப்போது, சட்ட விதிகளுக்கு மாறாக எந்த இடத்திலும் தான் செயல்பட்டது இல்லை என்றும், பல முறை அமைச்சராக இருந்தாலும் சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட எனக்கு சொந்தமானது இல்லை எனவும், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும், வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாகவும் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு உள்ளது.
 
இவற்றில் எந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கங்களும் தெரிவிக்கவில்லை. மூத்த அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வீட்டில் நடைபெறும் இந்த சோதனை திண்டுக்கல் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சராக இருந்த பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருந்தது. இந்த நிலையில் அமலாக்கத் துறை ஐ.பெரியசாமியை குறிவைத்துள்ளது.
 

related_post