dark_mode
Image
  • Thursday, 21 August 2025

இந்தியாவை தாண்டி தமிழ் மொழி பரவ வெளி மாநில மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கிடுக ! ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

இந்தியாவை தாண்டி தமிழ் மொழி பரவ வெளி மாநில மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கிடுக ! ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் தமிழ் மொழி பரவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வெளி மாநில மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கிடுக என திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

வெளி மாநில தமிழ் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை திமுக அரசு வழங்கவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,

தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்றும், உலக நாகரிகத்தை வழிநடத்திய மொழி என்றும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட மொழியை கற்பதற்காக வெளி மாநிலங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் போராடும் சூழ்நிலையை திமுக அரசு உருவாக்கி விட்டதாக அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Image

Image

 

தாய் மொழி மறந்துவிட கூடாது- ஓ.பன்னீர் செல்வம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் அமைப்புகள் வழியாக தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவச தமிழ்ப் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால் இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் அனுப்பப்படவில்லை என அந்த அமைப்புகள் பல முறை புகார் தெரிவித்துள்ளன. மேலும், பத்து பாடப்புத்தகங்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள், “ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் காகித விலை உயர்வு, ஊதியச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளோம்” என்று விளக்கம் அளித்தனர்.

“நிதி நிர்வாகச் சீரழிவு காரணமாக வெளி மாநிலங்களில் படிக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை கற்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளி மாநில தமிழ்ப் பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையை எட்டியுள்ளன. அங்குள்ள அமைப்புகள் தனியாக இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் பாடப்புத்தகங்களை அச்சடித்து வழங்க இயலாது. இதற்கான பொறுப்பை தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டும். பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இலவச திட்டத்தை திடீரென நிறுத்துவது எவ்விதத்திலும் நியாயம் அல்ல.

2024-25 ஆண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டதாகவும், மத்திய அரசுக்கு வருவாயை பெற்றுத் தரும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு என்றும் பெருமைபடும் முதலமைச்சர், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் செலவுக்காக தமிழ்ப் பாடப்புத்தகங்களை வழங்க முடியவில்லை என்று கூறுவது ஆட்சித் திறமையின்மையின் சின்னமாகும். ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று விளம்பரம் செய்யும் திமுக அரசு, நடைமுறையில் தாய்மொழிக்குத் தகுந்த முக்கியத்துவம் தரவில்லை என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

தமிழ் மொழி இந்தியாவை தாண்டி உலகம் முழுக பரவ வேண்டும்

தமிழ் மொழி தமிழ்நாட்டுக்குள் மட்டுமின்றி இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை இலவசமாக அனுப்ப வேண்டும்.

அதற்கான நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக முன்வர வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

related_post