எல்லாம் சரி! ஆனால், அந்த அறிவிப்பு இல்லையே?! அதிருப்தியில் டிடிவி தினகரன்!

பெண்காவலர்களுக்கான பொன்விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில், பெண்காவலர்கள்பணியிடத்திலும், சமூகத்திலும்எதிர்கொள்ளும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இத்துக்குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெண்காவலர்களுக்கான பொன்விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டபோதிலும், அதில் பெண்காவலர்கள் பணியிடத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலர்கள் சக ஆண் காவல் உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.
விசாரணைக்குச் செல்லும் இடங்களிலும், அரசியல் பொதுகூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிகளுக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுகின்றன.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் பெண்காவலர்களை காக்க வேண்டிய அரசானது, இத்தகைய கொடுமைக்கு உள்ளாகும் பெண்காவலர்களை பாதுகாக்கும் நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல.
பெண்காவலர்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆராய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து பரிந்துரைகளைப் பெற்று அமல்படுத்த வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
