சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்

சென்னை: சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் வழித்தடங்களில், மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய வழித்தடங்களில், மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில், ரயில் பாதைகளை தயார்படுத்த, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை - ஜோலார்பேட்டை - பெங்களூரு மற்றும் ஹைதராபாத் - சென்னை ஆகிய வழித்தடங்கள் முக்கியமானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'குரூப் ஏ' வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புகள் தயார் செய்யப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் - அரக்கோணம், கூடூர் தடத்தில், தற்போது மணிக்கு அதிகபட்சமாக, 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை - ஜோலார்பேட்டை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை வழித்தடங்களில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மொத்த துாரம், தற்போது செல்லும் வேகம், வளைவு பகுதிகள், பழைய பாலங்கள், புதுப்பிக்க வேண்டிய பாலங்கள், பாதுகாப்பு சுவர்கள் அமைவிடங்கள், சிக்னல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விபரங்கள், அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த திட்ட அறிக்கைக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபின், அடுத்தகட்ட பணிகளை படிப்படியாக துவங்க உள்ளோம். அனைத்து கட்டமைப்பு பணிகளையும் முடிக்க, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description