போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.
சிவகங்கை மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரில் இருந்து நகை திருடுபோனது. கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.
உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு சென்ற த.வெ.க., தலைவர் விஜய், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அவரின் தாயார் மற்றும் சகோதரர் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்த விஜய், ரூ.2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார். அஜித்குமார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய் உடன் த.வெ.க., நிர்வாகிகள் உடன் சென்றனர்.